இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமானது மிசோரம்: சாத்தியமானது எப்படி?

லால்துஹோமா
லால்துஹோமா
Updated on
2 min read

ஐஸ்வால்: உல்லாஸ் (ULLAS - Understanding Lifelong Learning for All in Society) முன்முயற்சியின் கீழ் மிசோரம் அதிகாரபூர்வமாக முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மாறியுள்ளது என்று அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.

மிசோரம் பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் மிசோரம் கல்வி அமைச்சர் டாக்டர் வன்லால்த்லானா ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மிசோரம் முதல்வர் லால்துஹோமா, "இன்று நமது மாநிலத்தின் பயணத்தில் ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது. நமது மக்களின் கூட்டு விருப்பம், ஒழுக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் ஒரு மாற்றத்திற்கான மைல்கல் இது.

உல்லாஸ் தரநிலைகளின்படி 95% கல்வியறிவு விகிதத்தை தாண்டியுள்ளோம். இதனால் மிசோரம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறியுள்ளது. நாங்கள் 98.2% கல்வியறிவு விகிதத்தை அடைந்துள்ளோம். மிசோரம் கல்வியறிவு தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக எங்கள் கல்வி அமைச்சர் டாக்டர் வன்லால்த்லானா, ஒப்பந்த அடிப்படையில் 292 கல்வியாளர்களை நியமித்தார். இந்த சாதனை முடிவு அல்ல, புதிய தொடக்கம். இந்த நாளை ஒரு பிரச்சாரத்தின் முடிவாக அல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் விடியலாக நாங்கள் கொண்டாடுகிறோம்.

இனி ஒவ்வொரு மிசோரம் மக்களும் டிஜிட்டல் கல்வியறிவு, நிதி கல்வியறிவு மற்றும் தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்துவதில் உயர்ந்த இலக்கை அடைவோம். நாம் நாட்டில் முதலிடத்தில் இருப்பதில் பெருமைப்படுகிறோம். மேலும் சிறந்தவர்களாக இருக்க நாம் பாடுபடுவோம். இந்த அறிவிப்பு கற்றல் மற்றும் அதிகாரமளிப்பின் ஒரு புதிய அலையைத் தூண்டட்டும். ஒரு புத்திசாலித்தனமான, வலுவான மற்றும் ஒன்றுபட்ட மிசோரத்தை நோக்கி நாம் முன்னேறுவோம்” என்றார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மிசோரம் மக்களை வாழ்த்தினார். மேலும், இந்த சாதனைக்கு பங்களித்த அனைவரின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

கல்வி அமைச்சகத்தின் உல்லாஸ் முன்முயற்சியின் கீழ் மிசோரமுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உல்லாஸ் அளவுகோலின்படி ஒரு மாநிலம் குறைந்தபட்சம் 95% கல்வியறிவு விகிதத்தை அடைந்தவுடன் முழு கல்வியறிவு பெற்றதாக அறிவிக்கப்படும். 2023–2024 காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி (PLFS) தற்போது மிசோரத்தின் கல்வியறிவு 98.2% ஆக உள்ளது.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, ​​மிசோரம் 98.2% கல்வியறிவு விகிதத்தை அடைந்துள்ளதாக லால்துஹோமா சபையில் தெரிவித்தார். இது தேசிய சராசரியை விட மிக அதிகம்.

இலக்கை அடைந்தது எப்படி? - அனைவருக்கும் கல்வியளிக்கும் முயற்சியின் கீழ் மிசோரமில் மாநில எழுத்தறிவு மையம் (SCL) நிறுவப்பட்டது, மேலும் தன்னார்வ ஆசிரியர்களுக்கான மார்க்தர்ஷிகா போன்ற கூடுதல் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்திற்கான சர்வேயர்களாக கிளஸ்டர் வள மைய ஒருங்கிணைப்பாளர்கள் பணியாற்றினர். இதன்படி 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 3,026 படிப்பறிவில்லாத நபர்களை அடையாளம் கண்டனர். அவர்களில் 1,692 பேர் கல்வி கற்க விருப்பம் தெரிவித்தனர்.

அவர்களுக்கு கல்வியளிக்க 292 தன்னார்வ ஆசிரியர்கள் மாவட்ட திட்ட அலுவலகங்களால் பணியமர்த்தப்பட்டனர். இதனையடுத்து பள்ளிகள், சமூக அரங்குகள், நூலகங்கள் மற்றும் தேவைப்படும்போது கற்பவர்களின் வீடுகளில் கூட வகுப்புகள் நடத்தப்பட்டன.

உல்லாஸின் முயற்சியின் கீழ் முழு எழுத்தறிவு பெற்றதாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம் மிசோரம் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in