மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை எச்சரிக்கை
Updated on
2 min read

மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது கரோனா பாதிப்பு காரணமாக லேசான அறிகுறிகளுடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மகாராஷ்டிராவில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பாதித்து உயிரிழந்த இரண்டு பேரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இணை நோய்களை கொண்டவர்கள். இறந்தவர்களில் ஒருவருக்கு ஹைபோக்ளைசீமியா வலிப்புடன் நெஃப்ரோடிக் நோய் இருந்தது. மற்றொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

மகாராஷ்டிராவில் ஜனவரி முதல் மொத்தம் 6,066 ஸ்வாப் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அவற்றில் 106 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவற்றில் 101 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் புனே, தானே மற்றும் கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தற்போது, ​​லேசான அறிகுறிகளுடன் 52 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளிலும் கூட கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டுப்பாட்டில் உள்ளது: இதற்கிடையில் இந்தியாவில் கரோனா பரவல் குறித்து மத்தியசுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. மே 19-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 257 ஆக உள்ளது. நாட்டின் மக்கள்
தொகையை கருத்தில் கொள்ளும்போது இது மிகமிக குறைவு. தவிர, இது சாதாரண பாதிப்புதான். எனவே, மருத்துவமனையில் அனுமதிக்க அவசியம் இல்லை. இருப்பினும், நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

முக கவசம் அணிய சுகாதார துறை அறிவுறுத்தல்: பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக சுகாதார நிறுவனம் கடந்த 4-ம் தேதி வெளிட்ட வாராந்திர கரோனா அறிக்கையின்படி, தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கரோனா பரவல் குறைவாகவே உள்ளது. மேலும், விரீயம் இழந்த ஒமைக்ரான் வைரஸின் உட்பிரிவான ஜேஎன்1 வகை தொற்றுகளே காணப்படுவதாகவும், புதிதாக உருமாறிய வைரஸ் பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது.

இந்தியாவிலும் இந்த ஆண்டில் கரோனா பரவல் மிக குறைந்த அளவே காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் இல்லை. கரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனாலும், பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளவர்கள், குறிப்பாக காய்ச்சல், நுரையீரல் சார்ந்த இணைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in