

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் லீபா பள்ளத்தாக்கில் செயல்பட்ட பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதன்பிறகு கடந்த 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது.
அப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. இதுகுறித்து இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் லீபா பள்ளத்தாக்கில் 3 பாகிஸ்தான் ராணுவ தளங்கள் செயல்பட்டன. இந்த தளங்களில் ஆயுத கிடங்குகள், எரிபொருள் கிடங்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன.
ஆபரேன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது லீபா பள்ளத்தாக்கில் இருந்த அனைத்து ராணுவ தளங்களும் நிலைகளும் முழுமையாக அழிக்கப்பட்டன. இந்த தளங்களை சீரமைக்க குறைந்தபட்சம் ஓராண்டு வரை தேவைப்படும். எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் 64 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூரின்போது காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக 3 மடங்கு அதிகமாக நாங்கள் தாக்குதல் நடத்தினோம். இதில் பாகிஸ்தானின் எல்லையோர நிலைகள் முழுமையாக அழிந்துள்ளன. எங்களது தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடந்த 10-ம் தேதி காலையில் பாகிஸ்தான் நிலைகளில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டன.
காஷ்மீரின் முஷாபராபாத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவு எல்லைப் பகுதியை ஆக்கிரமிப்பு காஷ்மீரின் லீபா பள்ளத்தாக்கு பகிர்ந்திருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டில் லீபா எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. அப்போது பாகிஸ்தானின் பல்வேறு ராணுவ நிலைகள், தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
தற்போது மீண்டும் ஒருமுறை லீபா பள்ளத்தாக்கில் ராணுவ தளங்கள், தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டு உள்ளன. இந்த எல்லைப் பகுதியை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். இவ்வாறு இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.