Last Updated : 21 May, 2025 05:55 AM

3  

Published : 21 May 2025 05:55 AM
Last Updated : 21 May 2025 05:55 AM

குஜராத்தின் முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம்.திரிவேதி ஓய்வு

பேலா எம்.திரிவேதி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய குஜராத்தின் முதல் பெண் நீதிபதி பேலா எம்.திரிவேதி ஓய்வு பெற்றார். குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி பேலா எம்.திரிவேதி, கடந்த 2021, ஆகஸ்ட் 31-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் 7-வது பெண் நீதிபதியான பேலா, குஜராத்திலிருந்து இப்பதவியை பெற்ற முதல் பெண் ஆவார். உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியதற்காக பாராட்டப்படுகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் முக்கியமான அரசியல் சாசன அமர்வுகளிலும் இவர் இடம்பெற்றிருந்தார். கடந்த 2019-ல் கொண்டுவரப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துகு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இதில் அந்த சட்டம் செல்லும் என நவம்பர் 2022-ல் (3: 2) தீர்ப்பு வழங்கிய அமர்வில் நீதிபதி பேலாவும் இடம்பெற்றிருந்தார்.

தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டை அறிமுகம் செய்வதில் மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என வெளியான (6:1) தீர்ப்பிலும் நீதிபதி பேலாவின் பங்கு உள்ளது. இதில் இவர் மட்டுமே இந்த அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது என மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், நீதிபதி பேலா எம்.திரிவேதி பணி ஓய்வு பெற்றார். இவர் வரும் ஜுன் 9-ம் தேதி ஓய்வு பெற இருந்தார். ஆனால், மே 17 முதல் உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்பதால் மே 16-ம் தேதி அவருக்கு கடைசி வேலைநாளாக அமைந்தது. இவரது ஓய்வை ஒட்டி, பாரம்பரிய முறைப்படி கடந்த வெள்ளிக்கிழமை பாரம்பரிய சிறப்பு அமர்வில் தலைமை நீதிபதியின் அறையில் வழியனுப்புதல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமை நீதிபதி பி.ஆர்.காவாய், அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் கபில் சிபல், ராஜு உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் அவரைப் பாராட்டிப் பேசினர்.

கடந்த ஜூன் 10, 1960-ல் வடக்கு குஜராத்தின் படானில் நீதிபதி பேலா பிறந்தார். குஜராத் உயர் நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். ஜூலை 10, 1995-ல் அகமதாபாத் நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்டார். ஒரே நீதிமன்றத்தில் தனது நீதிபதி தந்தையுடன் பணி செய்த காரணத்தால் நீதிபதி பேலாவின் பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

இதைத் தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்தின் விஜிலன்ஸ் பதிவாளர், முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரது சட்டத் துறையின் செயலாளர், சிபிஐ நீதிமன்ற நீதிபதி, சில வழக்குகளின் சிறப்பு நீதிபதி என முக்கிய பதவிகளை வகித்தார்

கடந்த பிப்ரவரி 17, 2011-ல் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியானார் பேலா. பிறகு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட அவர் அங்கிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தின் சில முக்கிய வழக்குகளை விசாரித்த அமர்விலும் இவர் இடம் பெற்றிருந்தார். இதில், தமிழ்நாட்டின் மாவட்ட ஆட்சியர்கள் மீதான மணல் வழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு, தேசிய நெடுஞ்சாலை பணி ஊழல் தொடர்பான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x