

கொல்கத்தா: வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு பர்ஹாம்பூர் எம்.பி. யூசுப் பதானுக்கு பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் பெயரை திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க அனைத்து கட்சி எம்.பி.க்களை உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி. கனிமொழி, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி சஞ்சய் ஜா உள்ளிட்ட 7 பேரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இதில் சஞ்சய் ஜா தலைமையிலான குழுவில் திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதியாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் பர்ஹாம்பூர் எம்.பி.யுமான யூசுப் பதான் அறிவிக்கப்பட்டார். எனினும் இக்குழுவில் இருந்து அவர் விலகினார்.
இதற்கிடையில் தங்கள் கட்சி எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கு முன் தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்புகொண்டு பேசியதாவும் அப்போது திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தனது மருமகனுமான அபிஷேக் பானர்ஜி பெயரை மம்தா பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதியாக அபிஷேக் பானர்ஜியை மம்தா நியமித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.