Last Updated : 20 May, 2025 06:24 PM

1  

Published : 20 May 2025 06:24 PM
Last Updated : 20 May 2025 06:24 PM

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்: பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரதத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம். இது 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. இந்தத் திட்டம் சமீபத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.

எங்களிடம் ஆயிரக்கணக்கான சுகாதார கட்டமைப்புகள் உள்ளன. அவை புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை பரிசோதித்து கண்டறிகின்றன. ஆயிரக்கணக்கான பொது மருந்தகங்கள் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் உயர்தர மருந்துகளை வழங்குகின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதைக் கண்காணிக்க எங்களிடம் ஒரு மின்னணு தளம் உள்ளது. லட்சக் கணக்கான மக்கள் தனித்துவமான மின்னணு சுகாதார அடையாளத்தைக் கொண்டுள்ளனர். காப்பீடு, பதிவுகள் மற்றும் தகவல்களை ஒருங்கிணைக்க இது எங்களுக்கு உதவுகிறது. தொலை மருத்துவம் மூலம், எவரும் ஒரு மருத்துவரிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை. எங்களுடைய கட்டணமில்லா தொலை மருத்துவச் சேவை 34 கோடிக்கும் அதிகமான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

எங்கள் முன்முயற்சிகள் காரணமாக, மொத்த சுகாதார செலவின சதவீதத்தில் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், அரசின் சுகாதாரச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.

மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் எவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறோம் என்பதில்தான் உலகின் ஆரோக்கியம் உள்ளது. உலகளாவிய தென் பகுதி நாடுகள் குறிப்பாக சுகாதார சவால்களால் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவின் அணுகுமுறை அளவிடக்கூடிய மற்றும் நிலையான மாதிரிகளை வழங்குகிறது. எங்கள் கற்றல்களையும் சிறந்த நடைமுறைகளையும் உலகத்துடன், குறிப்பாக உலகளாவிய தென் பகுதி நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

ஜூன் மாதம், 11வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு, 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா' என்ற கருப்பொருளை சர்வதேச யோகா தினம் கொண்டுள்ளது. உலகிற்கு யோகாவை வழங்கிய நாட்டிலிருந்து, அனைத்து நாடுகளையும் பங்கேற்க அழைக்கிறேன்.

வேதங்களிலிருந்து ஒரு பிரார்த்தனையுடன் நான் முடிக்கிறேன். அனைவரும் மகிழ்ச்சியாகவும், அனைவரும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். அனைவரும் நலம் விரும்பிகளாக இருப்போம், யாரும் துன்பப்படாமல் இருப்போம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முனிவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், நோயின்றியும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். இந்த பார்வை உலகை ஒன்றிணைக்கட்டும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x