Published : 20 May 2025 01:23 PM
Last Updated : 20 May 2025 01:23 PM
அமிர்தசரஸ்: பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்வதற்காக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலின் புனித வளாகத்தினுள் வான்பாதுகாப்பு அமைப்பினை நிறுவ கோயிலின் தலைமை கிராந்தி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின்பு பொற்கோயிலைக் குறிவைத்து பாகிஸ்தான் பலமுறை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தினார். ராணுவ வான்பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் சுமர் இவான் டி குன்ஹா கூறுகையில், "ராணுவத்தின் வான்பாதுகாப்பு அமைப்பினை நிலைநிறுத்திக் கொள்வதற்கு பொற்கோயில் தலைமை கிராந்தி அனுமதி அளித்திருப்பது சிறப்பானது. பல வருடங்களில் முதல் முறையாக அவர்கள் பொற்கோயிலின் விளக்குகளை அணைத்திருக்கலாம். அதனால் எங்களால் ட்ரோன்களைத் தெளிவாக பார்க்க முடிந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகளிடம் விளக்கம் அளித்த பின்பு, அச்சுறுத்தலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை புரிந்து கொண்டனர். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் உலகப்புகழ் பெற்ற ஒரு நினைவுச் சின்னத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து அவர்கள் எங்களுக்கு வான்பாதுகாப்பு அமைப்பினை நிறுவிக்கொள்ள அனுமதி அளித்தனர். அதன்படி ட்ரோன் துப்பாக்கிகள் நிறுவப்பட்டன. பொற்கோயிலின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
அதிருஷ்டவசமாக அவர்கள் (பாகிஸ்தான்) என்ன செய்வார்கள் என்று நாங்கள் முன்கூட்டியே யூகித்தோம். எல்லைகளைத் தாண்டி தாக்குவதற்கு முறையான இலக்குகள் இல்லாததால், கோயில்களை அவர்கள் குறிவைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். இந்தியாவில் குழப்பங்களையும், உள்நாட்டு மோதல்களை ஏற்படுத்த அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், நம்நாட்டு குடிமக்களையும், வழிபாட்டுத்தலங்களையும் குறிவைப்பார்கள் என்று நாங்கள் யோசித்தோம் " என்றார்.
பொற்கோயிலில் இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்த ராணுவ மேஜர் ஜெனரல் கார்த்திக் சேஷாத்ரி, சீக்கிய கோயில் மீது நடத்தப்பட்ட அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்திய எல்லையில் தாக்குவதற்கு முறையான எந்த இலக்குகளும் பாகிஸ்தானிடம் இல்லை. இந்திய ராணுவத்தினை நேரடியாக எதிர்கொள்ளும் வலிமையும் தைரியமும் பாகிஸ்தானிடம் இல்லை. அதனால் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு கொள்கையாக கொண்டுள்ளது. அது ட்ரோன் தாக்குதலை நாடுகிறது.
அவர்கள் எல்லையோரத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்களையும் தாக்கினர். அதற்கு உதாரணம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில். பொற்கோயிலைக் குறிவைத்து பல ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்திய ராணுவத்தால் அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன." என்று தெரிவித்தார்.
மேலும், அமிர்தசஸில் உள்ள பொற்கோயில் மற்றும் பஞ்சாப் நகரங்களை இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்புகளான ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, மற்றும் எல்- 70 வான் பாதுகாப்பு துப்பாக்கி ஆகியவை பாதுகாத்தன என்று இந்திய ராணுவம் திங்கள்கிழமை காட்சிப்படுத்தியது.
ஆபரேஷன் சிந்தூர்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரின் கீழ் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளின் மீது இந்திய துல்லிய தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குடிமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து 1,000 ட்ரோன்களை ஏவியது. அவை அனைத்தும் இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT