Last Updated : 20 May, 2025 11:42 AM

 

Published : 20 May 2025 11:42 AM
Last Updated : 20 May 2025 11:42 AM

டெல்லி எம்எல்ஏக்களுக்கான உள்ளூர் மேம்பாட்டு நிதி ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக குறைப்பு!

புதுடெல்லி: பாஜக தலைமையிலான டெல்லி அரசு, ஆண்டுதோறும் எம்எல்ஏக்களுக்கு வழங்கும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகக் குறைத்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசு, சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ. உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக உயர்த்தியது. அதனையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பாஜகவால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த சூழலில், டெல்லி அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்ட சமீபத்திய உத்தரவின்படி, மே 2 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி எம்எல்ஏ உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதி, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அரசாணையில்,"02.05.2025 தேதியிட்ட அமைச்சரவை முடிவு எண். 3187 இன் படி, எம்எல்ஏ உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு 2025-26 நிதியாண்டிலிருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு கட்டுப்படுத்தப்படாத நிதியாக இருக்கும். இதை அங்கீகரிக்கப்பட்ட மூலதன இயல்புடைய பணிகளுக்காகவும், சொத்துக்களை பழுதுபார்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் செலவிடலாம் என்றும் அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 கோடி என ரூ.350 கோடியை அரசாங்கம் ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில், 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியாக ரூ. 4 கோடி வழங்கப்பட்டது, இது 2023-24ல் ரூ.7 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x