இந்தியருக்கு இனி வெளிநாட்டில் வேலை இல்லை: குர்கான் தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி கருத்து

இந்தியருக்கு இனி வெளிநாட்டில் வேலை இல்லை: குர்கான் தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி கருத்து

Published on

புதுடெல்லி: இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார். இவர், ஜிஎஸ்எஸ் ஆக்ஸலரேட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆவார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: சர்வதேச மாணவர்களின் கனவான அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு என்பது இல்லை. அதுவும் முன்பைப் போல இந்தியா மாணவர்கள் அதுபோன்ற நாடுகளில் மிகவும் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுவிட முடியாது. தேனிலவு முடிந்துவிட்டது. எனவே, கோடிக்கணக்கில் கொட்டி படிக்க வைக்கும் பெற்றோர் இதனை ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து பிறகே முடிவெடுக்க வேண்டும்.

பொறியியல் மாணவர்கள் அதிலும் குறிப்பாக ஐஐடி மாணவர்கள், எளிதாக ஹேக் செய்து, அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்று, 2 லட்சம் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1.75 கோடி சம்பளத்தில் தொழில்நுட்ப வேலையை பெற்றனர். ஆனால் இந்த ஹேக் இனி வேலை செய்யாது. இவ்வாறு சாவ்னி தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் 6,000 பணியாளர்களை (அதன் பணியாளர்களில் 3 சதவீதம் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்) நீக்கியதன் பின்னணியில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேஷ் சாவ்னியின் இந்த பதிவு சமூக வலைதள பயனர்களிடையே தற்போது கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு பிரிவினர் சாவ்னியின் கருத்து சரி என்று தெரிவித்துள்ளனர். ஆனால், மற்றொரு தரப்பினர் திறமையான நபருக்கு எல்லா இடத்திலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in