சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூடியூபர் 'யாத்ரி டாக்டர்' பாகிஸ்தான் உளவாளியா? - உளவு துறை தீவிர விசாரணை

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூடியூபர் 'யாத்ரி டாக்டர்' பாகிஸ்தான் உளவாளியா? - உளவு துறை தீவிர விசாரணை
Updated on
2 min read

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூ டியூபர் 'யாத்ரி டாக்டரின்' பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உளவாளியாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரோடு தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த யூ டியூபர் பிரியங்கா சேனாபதி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார்.

இந்த வரிசையில் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கி பழகிய யூ டியூபர் 'யாத்ரி டாக்டரின்' பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. யாத்ரி டாக்டரின் இயற்பெயர் நவன்கர் சவுத்ரி. ஹரியானாவின் ரோத்தக் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 2015-ம் ஆண்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். தற்போது அவர் டெல்லியில் வசித்து வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டில் மருத்துவ பணியில் இருந்து விலகிய நவன்கர் சவுத்ரி, 'யாத்ரி டாக்டர்' என்ற பெயரில் யூ டியூப் சேனல் தொடங்கினார். உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து யூ டியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதுவரை 144 நாடுகளில் இவர் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். இவரது யூ டியூப் சேனலில் 20 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 6.5 லட்சம் பேர் இவரை பின்தொடர்கின்றனர்.

யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 'யாத்ரி டாக்டர்' நவன்கர் சவுத்ரி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். பாகிஸ்தானுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதுதொடர்பாக இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து நவன்கர் சவுத்ரி தனது யூ டியூப் சேனலில் கூறியிருப்பதாவது: தற்போது நான் அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டதை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தற்போது என்னை குறித்து எதிர்மறையான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்த தவறும் செய்யவில்லை. உலக நாடுகள் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். இதன்படி ஒருமுறை மட்டும் பாகிஸ்தான் சென்றுள்ளேன். ஜோதி மல்ஹோத்ராவை யூ டியூபராக மட்டுமே தெரியும். அவரது ரகசிய பின்னணி குறித்து தெரியாது. நான் தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது என்னை கைது செய்யலாம். விசாரணை அமைப்புகளுக்கு முழுஒத்துழைப்பு வழங்குவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜோதியின் பஹல்காம் பயணம்: ஹரியானா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு அண்மையில் சுற்றுலா சென்றுள்ளார். குல்மார்க், தால் ஏரி, லடாக் பகுதிகளிலும் அவர் சுற்றித் திரிந்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்களை யூ டியூபில் வெளியிட்டு உள்ளார்.

ஜோதியின் பஹல்காம் பயணம் தற்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக ஹரியானா போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு பகுதி வரை ஜோதி சென்றிருக்கிறார். அவர் சீன உளவு அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக காஷ்மீரை சேர்ந்த உளவுத் துறை அதிகாரிகள் ஜோதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in