Published : 19 May 2025 06:00 PM
Last Updated : 19 May 2025 06:00 PM
புதுடெல்லி: ‘140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கெனவே போராடி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் 'தர்மசாலை' (இலவச தங்குமிடம்) அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் குழுவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக, இலங்கைத் தமிழரான மனுதாரர் 2015-இல் கைது செய்யப்பட்டார். தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுததும் ‘யுஏபிஏ’ (UAPA) சட்டத்தின் கீழ் 2018-இல் விசாரணை நீதிமன்றத்தால் அந்த நபர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் அவரது சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளில் இருந்து ஏழு ஆண்டுகளாகக் குறைத்தது. மேலும், அவரது சிறைத் தண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டது.
மூன்று வருடங்களாக அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நபர், இலங்கைக்குத் திரும்பினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முறையான விசாவில் தான் இந்தியா வந்ததாகவும், தனது மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது இந்தியாவில் ‘குடியேறிவிட்டனர்’ என்றும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140 கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை மகிழ்விக்கக் கூடிய தர்மசாலை அல்ல. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்குச் செல்லுங்கள்.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT