பெங்களூருவில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த 100 மி.மீ கனமழை: வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு

பெங்களூருவில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த 100 மி.மீ கனமழை: வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு
Updated on
2 min read

பெங்களூரு: நேற்று (ஞாயிறு) இரவு முதல் இன்று (திங்கள்) காலைக்குள் பெங்களூருவில் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரு நகரில் 105.5 மிமீ மழை பெய்துள்ளது. ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் 78.3 மிமீ மழையும், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 105.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் (KSNDMC) தரவுகளின்படி, பெங்களூருவின் பல இடங்களில் மே 18 அன்று காலை 8:30 மணி முதல் மே 19 அன்று காலை 7 மணி வரை 100 மிமீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இவற்றில் கெங்கேரி (132 மிமீ), கேஎஸ்என்டிஎம்சி ஜிஇஓ வளாகம் (125.8 மிமீ), சோமஷெட்டிஹள்ளி (119.5 மிமீ), மதநாயக்கனஹள்ளி (116.5 மிமீ) மற்றும் யெலஹங்கா சவுடேஸ்வரி (103.5 மிமீ) ஆகியவை அடங்கும்.

பெங்களூருவுக்கு மே 23 வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையையும், தட்சிண கன்னடம், உடுப்பி, உத்தர கன்னடம், ஹாவேரி, பெலகாவி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது

இந்த மழை காரணமாக ஹோராமாவுவில் உள்ள ஸ்ரீ சாய் லேஅவுட் மற்றும் ரெயின்போ டிரைவ் லேஅவுட் ஆகிய இடங்களில் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்தது. சாய் லேஅவுட்டில் உள்ள வீடுகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற மக்கள் போராடி வருகின்றனர், மேலும் ரெயின்போ டிரைவ் லேஅவுட்டில், சில சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த கனமழை காரணமாக சாலைகள், பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். கனமழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை சந்தித்தனர். கோரமங்கலா, இந்திராநகர், சில்க் போர்டு சந்திப்புகள், எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் மற்றும் பிற பகுதிகளில் அதிகாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தண்ணீர் தேங்கியதால் இன்று காலை நேரத்தில் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் மூடப்பட்டது. ஹெச்ஆர்பிஆர் லேஅவுட், மத்திய வணிக மாவட்டம் (சிபிடி), ஜேபி நகர், வைட்ஃபீல்ட், சர்ஜாபுரா ஆகிய இடங்களில் பல சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. ஹோரமாவுவில் உள்ள ஸ்ரீ சாய் லேஅவுட்டிற்கு மீட்புக் குழுக்கள் படகுகளுடன் வந்துள்ளன.

அதேபோல பன்னேர்கட்டா சாலை மற்றும் பிற சாலைகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாந்திநகர் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியும் இதனால் வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் பலத்த காற்றின் காரணமாக கிளைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் சாலைகள் தடைபட்டு வாகனங்கள் சேதமடைந்தன. இப்பகுதியில் வீடுகள் மற்றும் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக ஹோரமவுவில் உள்ள ஸ்ரீ சாய் லேஅவுட்டில், குடியிருப்பாளர்களை மீட்க மாநகராட்சி நிர்வாகம் ஒரு பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பியது.

ரெயின்போ டிரைவ் லேஅவுட்டுக்குள் உள்ள சாலைகளிலும் தண்ணீர் புகுந்தது. கனமழை மற்றும் பலத்த காற்றில் கம்பங்கள் சாய்ந்து, டிரான்ஸ்மிஷன் கேபிள்கள் உடைந்ததால் நகரத்தின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. யெலஹங்கா, ஹென்னூர், சிங்கசந்திரா, சிவாஜிநகர், கஸ்தூரி நகர், பனஸ்வாடி, பிடிஎம் லேஅவுட், முன்னேகொல்லால் மற்றும் மத்திகெரே போன்ற பல பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் அதிகாலை வரை மின்சாரம் தடைபட்டது. இதனால் தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்யவும், மின்சாரம் மற்றும் தண்ணீர் சேவையை மீட்டெடுக்கவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெள்ளிக்கிழமை வரை பெங்களூருக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது. இது நகரம் முழுவதும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in