Published : 19 May 2025 06:44 AM
Last Updated : 19 May 2025 06:44 AM
புதுடெல்லி: பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் ட்ரோன்களை முடக்கிய இந்திய தயாரிப்பு டி4 கருவிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எதிரி நாட்டு ட்ரோன்களை முடக்கி செயல் இழக்கச் செய்வதற்காக டி4 என்ற கருவியை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியது. இதில் எலக்ட்ரானிக் ஜாமர்கள், லேசர் கருவிகள் எதிரி நாட்டு ட்ரோன்களை கண்டுபிடித்து முடக்கும். இவற்றை பெல் நிறுவனம் தயாரித்தது. இந்த டி4 கருவியை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தியது. இது வெற்றிகரமாக செயல்பட்டு பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் சிறிய ரக ட்ரோன்களை முடக்கியது.
இது குறித்து ரவி ரஞ்சன் என்பவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ இந்தியாவின் டி4 என்ற ட்ரோன் தடுப்பு கருவி தற்போது உலகத்தின் கவனத்தை கவர்ந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இது வெற்றிகரமாக செயல்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டி4, போர்களத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி, எதிரிகளை அச்சமடையச் செய்தது’’ குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்க போர் நிபுணரும், நவீன போர் மையத்தின் தலைவருமான ஜான் ஸ்பென்சர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: இந்தியாவின் டி4 ட்ரோன் தடுப்பு ஆயுதத்தின் செயல்பாடு மிகவும் ஈர்த்தது. இந்தியாவை நோக்கி வந்த பாகிஸ்தான் மற்றும் துருக்கி ட்ரோன்களை முடக்கியதில் டி4 முக்கிய பங்காற்றியது. இது போன்ற குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட ட்ரோன் தடுப்பு கருவி அமெரிக்காவின் தெற்கு எல்லை பாதுகாப்புக்கு தேவை’’ என குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலில், இந்தியா பயன்படுத்தி தொழில்நுட்ப திறன்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் ஜான் ஸ்பென்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இவர் ஏற்கெனவே தெரிவித்த கருத்தில், ‘‘ பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடித்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் எங்கேயும், எப்போதும் இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியும் என்பது தெளிவாகியுள்ளது’’ என குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT