Published : 19 May 2025 12:41 AM
Last Updated : 19 May 2025 12:41 AM
ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினார் அருகே குல்சார் ஹவுஸ் என்ற வணிக வளாகம் செயல்படுகிறது. இந்த வளாகத்தின் தரைதளத்தில் நகைக் கடைகளும், மேல்தளங்களில் வீடுகளும் உள்ளன. இங்கு நேற்று அதிகாலை 4 மணி அளவில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்துக்குள் வணிக வளாகம் முழுவதும் தீ மளமளவென்று பரவியது. கட்டிடம் முழுவதும் தீயும், புகையுமாக மாறியது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். இதனால் பலர் மூச்சு திணறி மயக்கம் அடைந்தனர். இதற்கிடையே, தகவல் கிடைத்து போலீஸார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 10 தீயணைப்பு வாகனங்கள், கிரேன்கள் உதவியுடன் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. இதற்குள் வணிக வளாகத்தின் மேல்தளங்களில் இருந்த 8 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 17 பேர்உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தீ விபத்து ஏற்பட்ட குல்சார் ஹவுஸ் வணிக வளாகத்தின் தரை தளத்தில் நகைக் கடைகள் உள்ளன. அதற்கு மேல் உள்ள 2 தளங்களில் வீடுகள் உள்ளன. தரை தளத்தில் நகைக்கடைகள் நடத்தும் தொழிலதிபர்கள், ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மேல் தளங்களில் உள்ள வீடுகளில் வசித்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 பேரை பத்திரமாக மீட்டோம். கரும்புகையால் மூச்சு திணறி வீடுகளுக்குள் மயங்கி விழுந்தவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகர் கூறும்போது, “மின் கசிவால் தீ விபத்துஏற்பட்டுள்ளது. போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து செயல்பட்டனர். தீ விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகள் நிவாரணம்: பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஹைதராபாத் தீ விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வருத்தத்தை தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்து நடந்த இடத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘சிறிய அளவிலான விபத்து என்றாலும், உயிர்ச் சேதம் அதிகமாக உள்ளது. தீயணைப்பு துறை நவீனமயமாக்கப்பட்டு இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். இதுகுறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பேன்’’ என்றார். முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT