பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் கைது!
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை 3.77 லட்சம் பேரும், ‘டிராவல் வித் ஜோ 1’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை 1.32 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவரது சமூக வலைதள பக்கத்தில் தேசம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று, அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதே போல அண்டை நாடுகளான சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான் வீடியோக்களும் அடங்கும்.

அதில் பாகிஸ்தானுக்கு சென்ற வீடியோக்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் குறித்து பாசிட்டிவ் கன்டென்டுகள் அவரது பயண வீடியோக்களில் அதிகம் இடம்பெற்றுள்ளது. லாகூர், அந்த நகரில் உள்ள அனார்கலி பஜார், அட்டாரி - வாகா எல்லை, பாகிஸ்தானில் உள்ள இந்து கோயில், அங்கு தயாரிக்கப்படும் உணவு குறித்தும் வீடியோ பதிவு செய்து ஜோதி மல்ஹோத்ரா பகிர்ந்துள்ளார். இதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான கலாச்சார ரீதியான ஒப்பீடுகளையும் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு காஷ்மீருக்கு சென்று வந்த வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ‘மீண்டும் காஷ்மீருக்கு செல்ல வேண்டுமா?’ என்ற தொனியில் அண்மையில் வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2023-ல் முதல் முறையாக ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருக்கு பாகிஸ்தான் தரப்பு அதிகாரிகள் உதவி உள்ளனர். இதனை புலனாய்வு விசாரணை முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர் கமிஷன் அதிகாரி ஒருவரின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது. அதன் மூலம் அந்த நாட்டின் உளவு அதிகாரிகளும் அறிமுகமாகி உள்ளனர். இதுவரை மூன்று முறை பாகிஸ்தானுக்கு அவர் சென்று வந்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் தரப்பு அதிகாரிகளுடன் என்கிரிப்ட் செய்யப்பட்ட வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்னாப்சாட் போன்ற தளங்கள் மூலம் ஜோதி மல்ஹோத்ரா தொடர்பில் இருந்துள்ளார். இந்தியாவில் அமைந்துள்ள பல்வேறு இடங்கள் குறித்த முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் தரப்பு அதிகாரி ஒருவருடன் வெளிநாடுகளுக்கு பயணமும் மேற்கொண்டுள்ளார். ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இது போல உள்ள இயங்கும் நெட்வொர்க்கில் ஜோதி மல்ஹோத்ரா ஒரு பகுதி என்ற தகவலும் கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in