ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சி குழுக்களில் இடம்பெற மார்க்சிஸ்ட் சம்மதம்!

ஏழு பிரதிதிதிகள் குழுக்களை வழிநடத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
ஏழு பிரதிதிதிகள் குழுக்களை வழிநடத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
Updated on
2 min read

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து தேசிய நலனுக்காக அரசின் சர்வதேச நடவடிக்கைகளுக்கான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுக்களில் இடம்பெறுவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தகவல்: பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமர் மோடி மற்றும் அவரது அரசு மறுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, பஹல்காம் தாக்குதல் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவும், விளக்கங்கள் பெறுவதற்காக எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் வழங்கவும் வேண்டும்.

எங்கள் கட்சியின் மாநிலங்களவைத் தலைவரை அரசு அழைத்து, பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட இருக்கிற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்களைப் பற்றி தெரிவித்துள்ளது. மேற்சொன்ன விஷயங்கள் குறித்த தயக்கங்கள் இருந்தபோதிலும், எங்களின் இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் அதேவேளையில், பரந்த அளவிலான தேசிய நலனுக்காக அத்தகைய பிரதிநிதிகள் குழுவில் ஒரு பகுதியாக இருக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கமளிக்க பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் முதல்வர்களை மட்டும் கூட்டுவது பாரபட்சமானது. குறிப்பாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் முதல்வர்களை உள்ளடக்கிய அனைத்து மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டி அத்தகைய விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்துகிறது.

அரசு முதலில் இந்திய மக்களுக்கு பொறுப்பு கூறவேண்டும். அதன் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். நிலைமையை வகுப்புவாதமயமாக்க ஆளுங்கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில அமைச்சர்களின் பிரச்சாரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் தெரிவித்துள்ளது.

பிரதிநிதிகள் குழு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்: ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு எதிரான இந்தியாவின் தொடர் போராட்டத்தின் பின்னணியில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஏழு குழுக்கள் ஐ.நா. பாதுகாப்புக்கு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் உட்பட முக்கியமான நட்பு நாடுகளுக்கு இம்மாத இறுதியில் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கியக் குழுக்கள் தீவிரவாத செயல்களின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை எதிர்த்துப் போரிடுவதற்கான இந்தியாவின் தேசிய அளவிலான ஒருமித்த கருத்தையும், உறுதியான அணுகுமுறையையும் உலக நாடுகளின் முன் எடுத்துரைப்பார்கள். மேலும், பயங்கரவாத செயல்களுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை இந்தப் பிரதிநிதிகள் குழுக்கள் உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பார்கள்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் புகழ்பெற்ற தூதரக அதிகாரிகள் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறுவார்கள். பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பிரதிதிதிகள் குழுக்களை வழிநடத்துவார்கள்:

1) சசி தரூர், இந்திய காங்கிரஸ் கட்சி
2) ரவிசங்கர் பிரசாத், பாஜக
3) சஞ்சய் குமார் ஜா, ஜே.டி.யு
4) பைஜயந்த் பாண்டா, பாஜக
5) கனிமொழி கருணாநிதி, தி.மு.க
6) சுப்ரியா சுலே, என்சிபி
7) ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in