கயா நகரத்தின் பெயரை மாற்றியது பிஹார் அரசு: அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

கயா நகரத்தின் பெயரை மாற்றியது பிஹார் அரசு: அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு!
Updated on
1 min read

பாட்னா: பிஹாரில் உள்ள கயா நகரம் இனி 'கயா ஜி' என்று அழைக்கப்படும். முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிஹார் மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். சித்தார்த், “உள்ளூர் உணர்வுகள், நகரத்தின் வரலாறு மற்றும் மத முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா, “பெயரை மாற்றும் இந்த முக்கியமான முடிவுக்காக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 'கயாஜி'யில் வசிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று அவர் கூறினார்.

பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத்தும் இந்த முடிவை வரவேற்றுள்ளார். அவர், “கயாவை 'கயாஜி' என்று பெயர் மாற்றும் மாநில அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கது மற்றும் பெருமைக்குரியது. இந்த முடிவு கயாவின் மத முக்கியத்துவத்தை மேலும் எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், சனாதன கலாச்சாரத்திற்கான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும், மத ஸ்தலங்களைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

கயா நகரம் அதன் மத முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் 'பித்ரபக்ஷ' காலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களுக்கு 'பிண்ட தானம்' வழங்க கயாவிற்கு வருகிறார்கள்.

கயா பண்டைய மகதப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த நகரம் ஃபால்கு நதிக்கரையில் அமைந்துள்ளது. கயாவில் மிகவும் முக்கியமான இடம் விஷ்ணுபாத் கோயில். இந்த கோயிலின், பசால்ட் பாறையில் விஷ்ணுவின் கால்தடம் பதிக்கப்பட்டுள்ளது. கயாசுரனின் மார்பில் தனது காலை வைத்து விஷ்ணு கயாசுரனைக் கொன்றதாக மக்கள் நம்புகிறார்கள்.

கயாவில் உள்ள புத்தகயா, உலகின் மிக முக்கியமான மற்றும் புனிதமான புத்த யாத்திரை மையங்களில் ஒன்றாகும். இங்குதான் போதி மரத்தின் அடியில் கௌதமர் புத்தராக மாறுவதற்கான ஞானத்தை பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in