Published : 17 May 2025 06:50 AM
Last Updated : 17 May 2025 06:50 AM
புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் இந்திய பிஎஸ்எஃப் வீரரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 23-ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் தவறுதலாக எல்லையைக் கடந்து பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்தபோது, பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
இந்தியா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் கடந்த வாரம் விடுவித்தது. பூர்ணம் குமார் தற்போது தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதுகுறித்து பூர்ணம் குமாரின் மனைவி ரஜனி கூறியதாவது: பாகிஸ்தானின் பிடியிலிருந்த 21 நாட்களும் என் கணவரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளனர். அவரைத் தூங்க விடாமல் செய்துள்ளனர். பஞ்சாபின் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதியில் பிஎஸ்எஃப் உயர் அதிகாரிகள், வீரர்கள், யார் யார் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்பது குறித்து அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.
17 வருடங்களாக எனது கணவர் பிஎஸ்எஃப் துணை ராணுவப் பிரிவில் இருக்கிறார். இனியும் அவர் தனது பணியைத் தொடர்வார். விரைவில் அவர் பணிக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அவருக்கு உடல்ரீதியான துன்புறுத்தல்களை பாகிஸ்தான் ராணுவம் தரவில்லை. ஆனால் மனரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். தங்கியிருந்த 21 நாட்களும் அவரிடம் இரவு முழுவதும் விசாரித்துள்ளனர். அவரை துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக உளவாளி என்ற சந்தேகத்திலேயே விசாரித்துள்ளனர்.
3 முறை அவரை வெவ்வெறு இடங்களுக்கு மாற்றி விசாரித்துள்ளனர். ஆனால், வேளா வேளைக்கு உணவு கொடுத்துள்ளனர். ஆனால், அவர் பல் தேய்க்க அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்குத் திரும்பியபோது அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். இவ்வாறு ரஜனி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT