காஷ்மீர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்: இந்திய ராணுவம்

காஷ்மீர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்: இந்திய ராணுவம்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் இறந்த 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 6 தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட 2 ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி, ராணுவ மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி ஆகியோர் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

அப்போது போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரின் கேலர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், 13-ம் தேதி கேலர் பகுதியை எங்களின் படைகள் சுற்றி வளைத்த போது, தீவிரவாதிகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினோம். இதில், தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி கூறியதாவது: எல்லை கிராமமான டிரால் பகுதியில் 2-வது கட்ட ஆபரேஷனை நிகழ்த்தினோம். நாங்கள் கிராமத்தைச் சுற்றி வளைத்த போது, தீவிரவாதிகள் வெவ்வேறு வீடுகளில் பதுங்கியிருந்து எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நேரத்தில், கிராமத்து மக்களைக் காப்பாற்றுவதே எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. கிராம மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிய பின்னர் பதில் தாக்குதலை நடத்தினோம். அதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 ஆபரேஷன்களில் மொத்தம் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் தீவிரவாதத்தை முழுவதுமாக ஒழிப்பதே எங்களது பணி.

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஷாஹித் குட்டே மற்றும் அட்னான் ஷாஃபி என இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் சோபியானைச் சேர்ந்தவர்கள். ஷாஹித் குட்டே லஷ்கர் மற்றும் அதன் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின் தலைமை செயல்பாட்டுத் தளபதியாக இருந்தார், அதே நேரத்தில் ஷாஃபி லஷ்கர்-இ-தொய்பா மற்றும் டி.ஆர்.எஃப்-ன் உயர் தளபதியாக செயல்பட்டு வந்துள்ளார்.

ஏப்ரல் 2024-ல் டேனிஷ் ரிசார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஷாஹித் குட்டே ஈடுபட்டார். இதில் ஜெர்மனி சுற்றுலாப் பயணிகளும் ஒரு ஓட்டுநரும் காயமடைந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் சோபியானில் நடந்த ஒரு கொலைச் சம்பவத்திலும் அவர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த 6 தீவிரவாதிகளில் இவர்கள் 2 பேரும், பெரிய அளவிலான தாக்குதலில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு பணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in