நீதிபதி பேலா எம்.திரிவேதி
நீதிபதி பேலா எம்.திரிவேதி

நீதிபதி பேலா எம்.திரிவேதி ஓய்வு - உச்ச நீதிமன்றத்தின் 11-வது பெண் நீதிபதியின் பின்புலம்

Published on

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம்.திரிவேதி ஓய்வு பெற்றார். ஆகஸ்ட் 31, 2021 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பேலா எம்.திரிவேதி பதவியேற்றார். அவருடன் மூன்று பெண்கள் உட்பட 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். உச்ச நீதிமன்றத்தின் 11-வது பெண் நீதிபதியான அவர், மூன்றரை ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய நிலையில், ஓய்வு பெற்றுள்ளார்.

1995-இல் குஜராத்தில் விசாரணை நீதிமன்ற நீதிபதியாக பணிபுரியத் தொடங்கிய பேலா எம்.திரிவேதி, அதில் இருந்து படிப்படியாக உயர்வு பெற்று பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட அரிய பெருமையை பெற்றவர். உச்ச நீதிமன்றத்தின் பல முக்கிய தீர்ப்புகளில் பேலா எம்.திரிவேதி ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

ஜூன் 10, 1960 அன்று குஜராத்தில் உள்ள படானில் பிறந்த நீதிபதி பேலா எம்.திரிவேதி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். பின்னர், 1995-இல் அகமதாபாத்தில் உள்ள நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அவர் நியமிக்கப்பட்டபோது அவரது தந்தை ஏற்கெனவே நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்தார் என்பதும், 'தந்தை - மகள் இருவரும் ஒரே நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவி வகித்தார்கள் என்பதும் லிம்கா புக் ஆஃப் இந்தியன் ரெக்கார்ட்ஸ் 1996 பதிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் பதிவாளர் விஜிலென்ஸ் மற்றும் குஜராத் அரசாங்கத்தில் சட்டச் செயலாளர் போன்ற பல்வேறு பதவிகளில் பேலா எம்.திரிவேதி பணியாற்றினார். 2011-இல் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

நீபதிபதி பேலா எம்.திரிவேதியின் பிரிவு உபசார விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், "நீதிபதி பேலா எம்.திரிவேதி எப்போதும் நியாயமானவர். கடின உழைப்பு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்றவர். அவர் நமது நீதித் துறைக்கு ஒரு மதிப்புமிக்க சொத்தாக இருந்திருக்கிறார். அவர் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதால் அவருக்கு நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in