Last Updated : 16 May, 2025 04:00 PM

1  

Published : 16 May 2025 04:00 PM
Last Updated : 16 May 2025 04:00 PM

3 நாட்கள், 2 என்கவுன்ட்டர்கள், 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - காஷ்மீரில் நடந்தது என்ன?

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட 2 முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அம்மாநிலத்தின் தெற்கு காஷ்மீரில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பெரிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள விக்டர் படையின் தலைமையகத்தில், விக்டர் படையின் பொது அதிகாரி மேஜர் ஜெனரல் தனஞ்சய் ஜோஷியுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) வி.கே.பிர்டி, "ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் தங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் மையத்தை தெற்கு காஷ்மீரில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு திருப்பி, கடந்த 3 நாட்களில் 6 பயங்கரவாதிகளை அழித்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு காரணமாக, இரண்டு வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களை ஒழித்தது குறிப்பிடத்தக்க சாதனை. செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் முறையே ஷோபியனின் கெல்லர் பகுதியிலும், புல்வாமாவில் உள்ள டிராலின் நாடார் பகுதியிலும் இந்த என்கவுன்டர்கள் நடந்தன. இரண்டு நடவடிக்கைகளிலும் தலா 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் முடிவுக்குக் கொண்டுவருவது எங்கள் கடமையாகும்" என தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் பல பகுதிகளை கவனம் செலுத்தும் பகுதிகளாக அறிவித்துள்ளதாக விக்டர் படை ஜிஓசி மேஜர் ஜெனரல் தனஞ்சய் ஜோஷி கூறியுள்ளார். "பனி உருகிய பிறகு பயங்கரவாதிகள் உயர்ந்த பகுதிகளுக்கு நகர்ந்ததாக எங்களுக்கு உளவுத் துறை தகவல்கள் கிடைத்தன. இதை மனதில் கொண்டு, எங்கள் குழுக்கள் தொடர்ந்து உயரமான பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் காடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

மே 12 இரவு ஷோபியனின் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன. எனவே அங்கு சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் குழு, தன்னை இடம்பெயர்த்து, ஒரு குறிப்பிட்ட வழியில் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தது. அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதேபோல், டிரால் பகுதியில் என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது. அங்கு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததும் எங்கள் படையிரன் கிராமத்தை சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் வெவ்வேறு வீடுகளில் இருந்தபடி துப்பாக்கிச் சூடு நடத்தினர். குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே எங்கள் சவாலாக இருந்தது. பின்னர் வீடுகளில் ஒவ்வொன்றாக முறையாகத் தேடுதல்கள் நடத்தப்பட்டன, மேலும் மூன்று பயங்கரவாதிகளும் தனித்தனி இடங்களில் வீழ்த்தப்பட்டனர்," என்று கூறினார். கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில், ஷாஹித் குட்டாய் முக்கியமானவர் என்பதும், அவர் பல பெரிய தாக்குதல்களில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x