சமூக ஊடகங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவுகள்: மேற்கு வங்கத்தில் இருவர் கைது

மேற்கு வங்க காவல் துறை | கோப்புப் படம்
மேற்கு வங்க காவல் துறை | கோப்புப் படம்
Updated on
1 min read

கொல்கத்தா: சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்தியாவுக்கு எதிரான பதிவுகளைப் பகிர்ந்த காரணத்துக்காக மேற்கு வங்க மாநிலத்தின் பூர்பா பர்தாமானில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் பர்தாமான் மாவட்டத்தை சேர்ந்த ஷாருக் ஷேக் மற்றும் நூர் முகமது ஷேக் ஆகிய இருவரும் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கத்துடன் பதிவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, திங்கட்கிழமையன்று மிலன் ஷேக் மற்றும் இம்ரான் ஷேக் ஆகிய இருவர் இதே காரணத்துக்காக மேற்கு வங்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதுவரை மூன்று நாட்களுக்குள், சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை தெரிவித்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

சமூக ஊடகங்களில் பகிர்ந்தது என்ன? - பர்தாமான் மாவட்டத்தின் குஸ்கரா நகராட்சியில் வசிக்கும் ஷாருக் ஷேக் என்பவர் ஃபேஸ்புக்கில், ‘ஹாய் மை ஜான் பாகிஸ்தானி. இந்த மன்னர் இந்தியாவின் 4 ரஃபேல்களை முறியடித்துள்ளார்" என்ற தலைப்பில் ஒரு விமானத்தின் புகைப்படத்துடன் பதிவிட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பதிவு வைரலாகப் பரவியதால் பொதுமக்கள் கோபமடைந்து புகாரளித்தனர்.

இதற்கிடையில், டிராக்டர் ஓட்டுநரான நூர் முகமது ஷேக், அதே நாளில் கல்னா காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஃபேஸ்புக்கில் இரண்டு சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பெல்ட்டால் கட்டுவது போலவும், இரண்டாவது படத்தில் பிரதமர் மோடி ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு ஓடுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கல்னா காவல் நிலையத்தில் பாஜக அளித்த புகாரைத் தொடர்ந்து, நூர் முகமதுவை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in