கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

விஜய் ஷா
விஜய் ஷா
Updated on
2 min read

புதுடெல்லி: கர்னல் சோபியா குரேஷி குறித்த மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டித்துள்ளார்.

இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி குறித்த மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், அமைச்சரின் கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை மற்றும் பொறுப்பற்றவை என்று தெரிவித்தார், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விஜய் ஷாவின் கருத்து குறித்து கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், “நீங்கள் என்ன வகையான கருத்துக்களைச் சொல்கிறீர்கள்? நீங்கள் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேளுங்கள்.” என்று தெரிவித்தார்.

“ஒரு நாளில் உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.” என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், கைது செய்யப்படுவதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு கோரிய விஜய் ஷாவின் மனுவையும் நிராகரித்தது. மேலும், விஜய் ஷாவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

எதிர்க்கட்சிகள், ராணுவ வீரர்கள் மற்றும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சில நிர்வாகிகளிடமிருந்துகூட பரவலான விமர்சனங்களைப் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக, அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மத்தியப் பிரதேசத்தின் பழங்குடிகள் நலம் மற்றும் போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறையின் அமைச்சரான விஜய் ஷா தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுடன் ராணுவ கர்னல் குரேஷியை தொடர்புபடுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

முன்னதாக, மே 12-ம் தேதி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் விஜய் ஷா, “அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம் அவர்களின் சகோதரியை அனுப்பி பழிவாங்கினோம். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது இந்து சகோதரர்களைக் கொன்றனர். பிரதமர் மோடி, அவர்களின் (பயங்கரவாதிகளின்) சகோதரியை ராணுவ விமானத்தில் அனுப்பி அவர்களின் வீடுகளைத் தாக்கி பதிலடி கொடுத்தார். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளை விதவைகளாக்கினர். பிரதமர் மோடி, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சகோதரியை அவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுப்பினார்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

தனது பேச்சில் ராணுவ கர்னல் குரேஷியின் பெயரை அமைச்சர் குறிப்பிடவில்லை என்றாலும், சர்ச்சை வெடித்த பின்பு கொடுத்த விளக்கங்களில் சோபியா குரேஷியின் பெயரைக் குறிப்பிட்டு, தனது அறிக்கை சிதைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். நாடு முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் அமைச்சர் விஜய் ஷாவின் கருத்துகளுக்காக அவரைச் சாடியுள்ளனர். மேலும், விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in