'அவசரமாக வீடு திரும்ப வேண்டாம்; பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள்': எல்லையோர கிராம மக்களுக்கு காஷ்மீர் போலீஸ் எச்சரிக்கை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் எல்லைதாண்டிய குண்டு வீச்சுத் தாக்குதல் காரணமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள் வீடு திரும்ப அவசரப்பட வேண்டாம், பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் வெடிக்காத வெடிகுண்டுகள் ஆராய்ந்து அகற்றப்படாத நிலையில் போலீஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் குண்டுவீச்சு தாக்குதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பாரமுல்லா, பந்திபோரா மற்றும் குப்வாராவில் எல்லையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சுமார் 1.25 லட்சம் மக்கள் தங்களின் வாழ்விடங்களி்ல் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் போலீஸார் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், முன்னணி கிராமத்தில் வசிப்பவர்கள் அவசரப்பட்டு வீடுதிரும்ப வேண்டாம். பாகிஸ்தானின் குண்டு வீச்சில் வெடிக்காத வெடி குண்டுகள் இன்னும் ஆய்வுசெய்யாததால், உயிருக்கு அபாயம் நீடிக்கிறது.

பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பகுதிகளுக்கு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டு மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிக்காத வெடிகுண்டுகள் ஆய்வு செய்யப்பட்டு அகற்றப்படும். கடந்த 2023-ல் மட்டும் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகில் உள்ள பகுதிகளில் வெடிகுண்டுகளின் மீதங்கள் வெடித்ததில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

ஏப்.22-ல் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தியா மே 7ம் தேதி நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின்பு பாகிஸ்தான் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர், 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் சுமார் 18 பேர் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்கள் நடந்த எல்லைதாண்டிய ட்ரோன்கள் மற்றும் குண்டுவீச்சு தாக்குதலுக்கு பின்பு இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தரை, வான் மற்றும் கடல்வழி துப்பாக்கிச்சூடுகளையும், அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு சனிக்கிழமை ஒப்புக்கொண்டன. என்றாலும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட சிலமணி நேரங்களில் பாகிஸ்தான் அதனை மீறியதாக இந்தியா குற்றம்சாட்டியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in