‘தீவிரவாதத்துக்கு எதிராகவே யுத்தம்’ - போர் நிறுத்தம் குறித்து பஹல்காமில் உயிரிழந்தவரின் மனைவி

‘தீவிரவாதத்துக்கு எதிராகவே யுத்தம்’ - போர் நிறுத்தம் குறித்து பஹல்காமில் உயிரிழந்தவரின் மனைவி
Updated on
1 min read

கான்பூர்: இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது குறித்து, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஷுபம் துவிவேதியின் மனைவி ஐஷன்யா துவிவேதி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்ட பாணிக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தேசத்தின் பாதுகாப்புப்படை மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தப் போராட்டம் தீவிரவாதத்துக்கு எதிரானது. தீவிரவாதத்தை ஒழிக்கவே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. தீவிரவாதம் உள்ள வரை, ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கை தொடரும் என நம்புகிறேன்” என ஐஷன்யா துவிவேதி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தான் ஷுபம் - ஐஷன்யா மண வாழ்க்கையில் இணைந்தனர்.

போர் நிறுத்தம்: இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் இன்று (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபட்டத்தை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத தளங்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது இந்தியா. தொடர்ந்து வியாழக்கிழமை இரவு முதல் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது. அதை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. இந்தச் சூழலில் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in