ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார்.

பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் 26 இடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று (சனிக்கிழமை) அதிகாலை பாகிஸ்தானில் உள்ள நான்கு விமானப்படைத் தளங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டம் லூனியில் உள்ள பயங்கரவாத ஏவுதளத்தை ஜம்மு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அழித்தனர்.

மேலும், பஞ்சாபில் உள்ள பாகிஸ்தானின் சர்கோதா விமானப்படை தளத்தின் மீது இந்தியா ஒரு சக்திவாய்ந்த பதிலடி தாக்குதலை நடத்தியது. மேலும், இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில், ரஹிம் யார் கான் விமானநிலையம் முற்றாக சேதமடைந்தது.

அதோடு, இந்திய ராணுவம் பயங்கரவாத ஏவுதளங்களை தகர்த்துள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் ஏடிஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் 2025 மே 08 மற்றும் 09 அன்று இரவு பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பயங்கரவாத ஏவுதளங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி அவற்றைத் தூள் தூளாக்கி, தகர்த்தெறிந்தது.

கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள இந்த பயங்கரவாத ஏவுதளங்கள், கடந்த காலங்களில் இந்திய மக்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கான மையங்களாக இருந்தன. இந்திய ராணுவத்தின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் திறன்களுக்கு குறிப்பிடத்தக்க அடியைக் கொடுத்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய ஆயுதப் படைகள் எடுத்துள்ள பதில் நடவடிக்கைகள் தொடர்பாகவும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in