Published : 10 May 2025 12:55 PM
Last Updated : 10 May 2025 12:55 PM

‘நேரடி பேச்சுவார்த்தைக்கான வழிகளை ஆராயவும்’ - ஜெய்சங்கரிடம் மார்கோ ரூபியோ வலியுறுத்தல்

மார்கோ ரூபியோவுடன் ஜெய்சங்கர் | கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியா பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அழைத்துப் பேசிய அமெரிக்க வெளியுறுவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, பதற்றத்தை தணித்து நேரடி பேச்சுவார்த்தைகளுக்கான வழிகளை ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம்மி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவறான புரிதல்களைத் தவிர்த்து இரண்டு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து, நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். எதிர்கால சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்” எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மார்க் ரூபியோ, பாகிஸ்தான் துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் இஷ்க் தாருடன் பேசினார். அப்போது “இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும்” என வலியுறுத்தினார் என்று புரூஸ் கூறினார்.

இந்தியா - பாக். மோதல்: நடப்பது என்ன? - கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x