பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி பயங்கரவாதத்தை வளர்க்க உதவும்: ஐஎம்எஃப் அமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி பயங்கரவாதத்தை வளர்க்க உதவும்: ஐஎம்எஃப் அமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்காகவோ பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா எச்சரித்துள்ளது

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்காக $1 பில்லியன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை (EFF) மதிப்பாய்வு செய்து, புதிய $1.3 பில்லியன் மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதி (RSF) கடன் திட்டத்தை வெள்ளிக்கிழமை பரிசீலித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினரான இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியதுடன் வாக்கெடுப்பையும் புறக்கணித்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகளாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகளை பாகிஸ்தான் தொடர்ந்து நம்பியிருப்பதையும், நிலையான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த அந்நாடு தவறியதையும் காரணம் காட்டி, பாகிஸ்தானில் சர்வதேச நாணய நிதிய திட்டங்களின் செயல்திறனை இந்தியா கேள்வி எழுப்பியது.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், பாகிஸ்தானுக்கு நான்கு தனித்தனி ஐஎம்எஃப் திட்டங்கள் வகுக்கப்பட்டத்தையும் அவற்றில் உள்ள குறைபாடுகள், மோசமான கண்காணிப்பு அல்லது பாகிஸ்தான் அரசு வேண்டுமென்றே ஒத்துழைக்காதது போன்றவற்றை இந்தியா சுட்டிக்காட்டியது.

பொருளாதார விவகாரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆழமான தலையீடு, கொள்கை சறுக்கல்கள் மற்றும் சீர்திருத்தங்களை தலைகீழாக மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது என்றும் ஒரு சிவில் அரசாங்கம் இப்போது ஆட்சியில் இருந்தாலும் கூட, ராணுவம் உள்நாட்டு அரசியலில் தொடர்ந்து ஒரு பெரிய பங்கை வகிக்கிறது என்றும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தொடர்ச்சியான நிதியுதவிகள் பாகிஸ்தானை பெரிய கடனாளியாக மாற்றும் அபாயம் இருப்பதாகவும், இது உலகளாவிய விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது. மிக முக்கியமாக, ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்காகவோ சர்வதேச நாணய நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in