காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) முறியடித்துள்ளனர். இந்த முயற்சியில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டத்தாக பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜம்மு பிஎஸ்எஃப் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மே 8-ம் தேதி சுமார் 11 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் நடந்த மிகப்பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பாகிஸ்தானின் தாண்டர் பகுதியில் இருந்து அங்குள்ள துருப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டினை பயன்படுத்தி பெரிய குழு ஒன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்தது. என்றாலும் விழிப்புடன் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், மிகப்பெரிய இந்த ஊடுருவலை தடுத்தனர்.

குறைந்தது 7 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இதன்மூலம் பாகிஸ்தான் தரப்புக்கு பெரும் சேதம் விளைவித்தனர். தொடர் கண்காணிப்புகளால் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. உடனடியாக பிஎஸ்எஃப் நடவடிக்கையில் ஈடுபட்டது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ந்தியா - பாக். போர் பதற்றம் பின்னணி: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம்.

அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து வியாழக்கிழமை பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

எல்லையோர மாநிலங்களில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லை கிராமங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலாகியுள்ளது. இதுபோல், தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in