ஆபரேஷன் சிந்தூர் | டெல்லியில் தொடங்கியது அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஆபரேஷன் சிந்தூர் | டெல்லியில் தொடங்கியது அனைத்துக் கட்சிக் கூட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் புதுடெல்லியில் தொடங்கியது.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் தலைமையிலான இக்கூட்டத்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜூ, “நமது நாடு ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. நமது ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன்’ சிந்தூர் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். நிலைமை குறித்து அனைத்துக் கட்சிகளுக்கும் விளக்க வேண்டும், ஏனெனில் இது அரசாங்கத்தின் பொறுப்பு. மேலும் பிரதமர் அவ்வாறு செய்ய எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். முழு நாடும் ஆயுதப் படைகளுடக்கு ஆதரவாக உள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆயுதப் படைகளால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அரசாங்கம் அதைப் பற்றி மிகவும் தெளிவாக உள்ளது. பிரதமர் மோடியின் நோக்கங்கள் ஏற்கெனவே உலகுக்குத் தெரிந்துவிட்டன. இதுபோன்ற சூழ்நிலையில், நாம் பிளவுபடக்கூடாது என்று பிரதமர் விரும்புகிறார். ஒவ்வொரு இந்தியரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது.” எனத் தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில தினங்களில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இன்று மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in