Published : 08 May 2025 06:26 AM
Last Updated : 08 May 2025 06:26 AM
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா ரெய்ச்சூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இன்று நான் வழக்கத்துக்கு மாறாக நெற்றியில் சிவப்பு பொட்டு வைத்துள்ளேன். அதற்கு காரணம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையே. இந்த பதிலடி இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளக்கூடியது. இந்த நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும்.
மத்திய அரசுக்கு எதிராக ரெய்ச்சூரில் போராட்டம் நடத்துவதற்காக வந்தேன். ஆனால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்ற தருணத்தில் அந்த போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது என்பதால் ரத்து செய்துவிட்டேன். இந்திய ராணுவத்தினரின் இந்த நடவடிக்கை மிகவும் துல்லியமானது. பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராணுவத்தின் அனைத்து நடவடிக்கைக்கும் கர்நாடக அரசு என்றும் துணையாக இருக்கும். அவர்களின் வீரம், தியாகம், நாட்டுக்கான போராட்டம் ஆகியவற்றை குறித்து கர்நாடகா பெருமிதம் கொள்கிறது''என தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்திகள் வெளியான நிலையில், கர்நாடக காங்கிரஸின் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் ''அமைதிதான் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்''என பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததும், அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.
இதற்கு கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, ''காங்கிரஸ் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறதா அல்லது பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறதா? இந்த பதிவுக்காக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோர் வெட்கப்பட வேண்டும்''என சாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT