Published : 08 May 2025 06:18 AM
Last Updated : 08 May 2025 06:18 AM

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய மேக்தூத், விஜய் தாக்குதல்கள்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னதாக பாகிஸ்தான் மீது மேக்தூத், விஜய் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை இந்திய ராணுவம் நடத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது கடந்த மாதம் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இதற்கு முன்னதாக 1999-ல் கார்கில், 2019-ல் புல்வாமா, 2016-ல் உரி, 2001-ல் நாடாளுமன்றம் மீது பாகிஸ்தான் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியபோது அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடியாக செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது. இதில், ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

1999-ல் கார்கில் போர் ஏற்பட்டபோது அதற்கு ‘விஜய்' என்று ராணுவம் பெயர் வைத்தது. கார்கிலில் நடந்த மற்றொரு தாக்குதலுக்கு ‘சஃபேத் சாகர்' என்றும் பெயரிட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த சிகரங்களை மீட்க நடந்த இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது.
மேலும் 1971-ல் நடந்த போரின்போது நடந்த தாக்குதல்களுக்கு ‘கேக்டஸ் லில்லி', ‘டிரைடண்ட்', ‘பைதான்' என்றும் இந்திய ராணுவம் பெயர் வைத்தது. 1971-ம் ஆண்டு நடந்த இந்தப் போர் வங்கதேச விடுதலைப் போர் என்று அழைக்கப்பட்டது. அப்போது, இந்தியா வங்கதேசத்துக்கு ஆதரவாக கரம் கோத்து நின்றது. அப்போதைய போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. டிசம்பர் மாதம் 16-ம் தேதி ஆயுதங்களுடன் பாகிஸ்தான் படைகள் சரண் அடைந்தன. இந்த போர் வங்கதேசத்தை ஒரு சுதந்திர நாடாக்கியது.

2019-ல் பிப்ரவரியில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு ‘பந்தர்' என்று பெயர் வைக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இது நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தி முகாமை அழித்தது.

1984-ல் லடாக்கில் நடந்த தாக்குதலுக்கு ‘மேக்தூத்' என்று இந்திய ராணுவம் பெயரிட்டது. 1965-ம் நடந்த போரின்போது ‘ரிடில்', ‘அப்ளேஸ்' என்று பெயரிடப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 1965-ம் ஆண்டு உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக மாறுவேடமிட்டு வந்த பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியபோது ‘ஆபரேஷன் ஜிப்ரால்டர்' மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. அப்போதைய போர் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் செப்டம்பர் 23-ம் தேதி வரை நடந்தது.

1971-ம் ஆண்டு நடந்த போருக்கு பிறகு தற்போதுதான் இந்தியாவின் முப்படைகள் இணைந்து பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதலை நடத்தியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x