தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பிரதமரின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்படவில்லை: கார்கே குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பிரதமரின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்படவில்லை: கார்கே குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு
Updated on
1 min read

ராஞ்சி: காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பில் மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

உளவுத் துறையின் தகவலை காஷ்மீர் போலீஸார், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்காதது ஏன்? தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? இவ்வாறு கார்கே கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் துகின் சின்ஹா கூறியதாவது: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பிரதமரின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் கார்கே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன என்பதை அனைத்து கட்சி கூட்டத்தில் அதிகாரிகளே ஒப்புக் கொண்டனர்.

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டனர். அன்றைய சூழலின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பாதது ஏன்? கடந்த 2001-ம் ஆண்டில் அமெரிக்காவில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டில் இஸ்ரேலில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இவற்றை இந்த நேரத்தில் காங்கிரஸுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இவ்வாறு துகின் சின்ஹா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in