Published : 07 May 2025 12:16 AM
Last Updated : 07 May 2025 12:16 AM
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற நீதிபதிகளின் சொத்து விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தற்போது 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 21 பேரின் சொத்து விவரத்தை உச்ச நீதிமன்றம் அதன் இணைய தளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரத்தை தெரிவித்துள்ளனர். மேலும் பீலா எம்.திரிவேதி, பி.வி.நாகரத்னா ஆகிய பெண் நீதிபதிகளில் பீலா திரிவேதி சொத்து விவரத்தை தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வரும் 13-ம் தேதி பணி ஓய்வுபெற இருக்கும் நிலையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக நீதிபதிகளின் சொத்து விவரம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிபதிகளின் சொத்து விவரத்தை பொதுவெளியில் வெளியிட கடந்த ஏப்ரல் 1-ம் முழு நீதிமன்றமும் முடிவு செய்தது. இதன்படி இதுவரை பெறப்பட்ட நீதிபதிகளின் சொத்துவிவரம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற நீதிபதிகளின் சொத்து விவரம் பெறப்பட்ட உடன் பதிவேற்றம் செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முழு நியமன நடைமுறைகளையும் உச்ச நீதிமன்றம் பகிர்ந்துகொண்டுள்ளது. இதில் நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பங்கு, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனைக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அளிக்கும் தகவல்களின் பங்கு உள்ளிட்ட விவரம் இடம்பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT