பவன் கல்யாண் | கோப்புப் படம்
பவன் கல்யாண் | கோப்புப் படம்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தல்

Published on

ஹைதராபாத்: இந்தியா - இலங்கை மீனவர்கள் நல்லிணக்கத்தின் மூலமும், இரு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில், 24 இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி, காயமடைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள தூதரக நல்லுறவுகளை அடிப்படையாகக் கொண்டு, இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நமது வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், இரு நாடுகளும் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் துரிதமான தீர்வை காண வேண்டும். எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். அதே வேளையில், இரு நாடுகளின் மீனவர்களின் கண்ணியமும், மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, நல்லிணக்கத்தின் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்,

முன்னதாக, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, ரூ.10 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் போன்றவற்றை பறித்துச் சென்றனர். இதில், 20 மீனவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில்தான் பவன் கல்யாண் அறிக்கை விடுத்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in