பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு நல்குவதாக மோடியிடம் புதின் உறுதி!

புதின் உடன் மோடி | கோப்புப் படம்
புதின் உடன் மோடி | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ரஷ்யா முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் அழைத்து, இந்தியாவின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். அப்பாவி உயிர்கள் இழப்புக்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவை தெரிவித்தார். கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் சிறப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேசியதாக ரந்திர் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார். "இரு தலைவர்களும் இந்தியா மற்றும் ரஷ்யாவின் சிறப்பு கூட்டாண்மையை (Special and Privileged Strategic Partnership) மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ரஷ்யாவின் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடைபெறும் இந்தியா - ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சிமாநாட்டுக்கு வருகை தருமாறு புதினுக்கு அழைப்பு விடுத்தார்" என ரந்திர் ஜெய்ஷ்வால் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in