‘ராகுல் காந்தி இந்து இல்லை’ - சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கருத்தால் சர்ச்சை

‘ராகுல் காந்தி இந்து இல்லை’ - சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கருத்தால் சர்ச்சை
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்து இல்லை என அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். சனாதன ஆதரவாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக, ராகுல் கோயில்களுக்குள் நுழைவதற்கும் தடை விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

வட மாநிலங்களின் சர்ச்சை துறவியாகக் கருதப்படுபவர் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி. இவர், உத்தரகாண்ட் மாநிலம் ஜோதிஷ்வர் பீடத்தின் சங்கராச்சாரியராகவும் கருதப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரையும் விமர்சித்துள்ளார். இதனால், அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, ஒரு சர்ச்சை துறவி எனவும் பெயர் எடுத்தவர்.

இந்த வகையில் அவர், காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை ‘இந்து அல்லாதவர்’ என்று அறிவித்துள்ளார். இத்துடன், அவரை இந்து மதத்திலிருந்து நீக்குவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் தனது உத்தராகண்ட் யாத்திரையின் போது செய்தியாளர்களிடம் கூறுகையில், “சில காலத்துக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மனுஸ்மிருதி குறித்து ராகுல் பேசினார். இதில் அவர், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தினார்.

அதை அப்போதே கண்டித்த நான், மூன்று மாதங்களுக்குள் ராகுல் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்டிருந்தேன். ஆனால் அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார். இது, இந்து மதத்துக்கு எதிராக ராகுல் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது.

எனவே, ராகுல் காந்தியை இந்து மதத்திலிருந்து நான் நீக்குகிறேன். நாட்டின் இந்து கோயில்களில் அவர் நுழைவதற்கும் நான்தடை விதிக்கிறேன். ராகுலுக்காக கோயில்களில் எந்த வகையான ஆரத்தி மற்றும் பூஜைகளும் செய்ய வேண்டாம் என புரோகிதர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in