Published : 05 May 2025 06:59 AM
Last Updated : 05 May 2025 06:59 AM
புதுடெல்லி: ராமர் என்பவர் கற்பனையான புராண கதாபாத்திரம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில், இந்து தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் அனைத்து சமூகங்களையும் அரவணைக்கும் மதச்சார்பற்ற அரசியல் எவ்வாறு வடிவம் பெற வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ராகுல் அளித்த பதிலில், “புத்தர், குருநானக், மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், கர்நாடகாவின் பசவர், கேரளாவின் நாராயண குரு (ஜோதிராவ்) புலே உள்ளிட்ட இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதிகள் யாரும் மத வெறியர்கள் அல்ல. இவர்களில் யாரும் நாங்கள் மக்களை தனிமைப்படுத்த விரும்புகிறோம் என்று கூறவில்லை. இவர்கள் அனைவரும் நமது அரசியலமைப்பில் உள்ள குரல்கள், ஒரே விஷயத்தைத்தான் கூறினார்கள். இதுதான் இந்திய பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் அடித்தளம்.
நமது புராண கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ள ராமர் உள்ளிட்டவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ராமர் மன்னிக்கும் குணம் கொண்டவர், கருணை உள்ளம் கொண்டவர். பாஜக சொல்வதை இந்து மத சிந்தனை என்று நான் கருதவில்லை. இந்து சிந்தனை மிகவும் பன்மைத்துவமானது. மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என கருதுகிறேன். மக்கள் மீதான வெறுப்பும் கோபமும் அச்சம் காரணமாக வருகிறது. நீங்கள் அச்சப்படவில்லை என்றால், யாரையும் வெறுக்க மாட்டீர்கள்” என்றார்.
ராகுல் காந்தியின் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா, “நாட்டின் துரோகி காங்கிரஸ். ராமர் கற்பனை கதாபாத்திரம் என ராகுல் கூறுகிறார். இதனால்தான் அவர்கள் (காங்கிரஸ்) ராமர் கோயிலை எதிர்த்தனர். பிரபு ராமர் வாழ்ந்ததைக்கூட சந்தேகிக்கின்றனர்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறும்போது, “பிரபு ஸ்ரீராமர் என்பவர் வெறும் புராண கதாபாத்திரம் என்பது காங்கிரஸாரின் மனநிலை. இந்துக்களின் நம்பிக்கையை கேலி செய்வது, ராமர் பற்றி கேள்வி கேட்பது, பின்னர் தேர்தலின்போது சனாதனம் மீது போலியாக அன்பு செலுத்துவதுதான் காங்கிரஸின் வழக்கம். காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT