இந்தியாவின் ராணுவ கண்​டோன்​மென்ட், ஏர்​பேஸ் உள்​ளிட்ட ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய 2 பேர் கைது

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்ததாக கூறி உளவாளிகள் இருவரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்களை போலீஸார் அழைத்து வந்தனர். படம்: பிடிஐ
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்ததாக கூறி உளவாளிகள் இருவரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்களை போலீஸார் அழைத்து வந்தனர். படம்: பிடிஐ
Updated on
1 min read

சண்டிகர்: எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பாகிஸ்தானுக்கு நமது நாட்டின் ராணுவ ரகசியங்களை கசியவிட்டதன் குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தசூழலில் இந்திய ராணுவத்தின் சில மிக முக்கியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதன் புகாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, அவர்கள் இந்திய ராணுவத்தின் கண்டோன்மென்ட் பகுதிகள், அமிர்தசரஸில் உள்ள ஏர்பேஸ் உள்ளிட்ட தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளனர் என்று பஞ்சாப் போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டில் பாலக் ஷெர் மாஸி மற்றும் சூரஜ் மாஸி என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் முற்றி வரும் சூழலில் அமிர்தசரஸ் ரூரல் போலீஸின் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

முதல்கட்ட விசாரணையில், அமிர்சரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங் என்ற பிட்டு என்ற ஹேப்பி மூலம் பாகிஸ்தான் உளவு நிறுவனங்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணை மேலும் தீவிரமடையும்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இக்கட்டான நேரத்தில் பஞ்சாப் காவல் துறை இந்திய ராணுவத்துடன் ஒன்றுபட்டு வலிமையாக நிற்கிறது. தேசிய நலன்களை பாதுகாப்பதன் கடமையில் இருந்து எங்களை யாரும் அசைக்க முடியாது. நமது ஆயுதப்படைகளின் பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி தரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in