Published : 04 May 2025 06:48 AM
Last Updated : 04 May 2025 06:48 AM
புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாட்டு குடியுரிமையும் இல்லாமல் உ.பி.யில் பெண் ஒருவர் தவித்து வருகிறார்.
கடந்த 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினையின் போது, இரு நாடுகளிலும் ஒரே குடும்பத்தின் உறவுகளும் பிரிந்தன. இந்த எண்ணிக்கை பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் அதிகம். இரு நாடுகளிலும் பிரிந்த உறவுகள் திருமணங்கள் மூலம் மீண்டும் சேர்வது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், உ.பி.யின் பரேலியில் சுபாஷ் நகரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தன் குடும்பத்தில் பிரிந்த ஒரு உறவுடன் 14 ஆண்டுக்கு முன்பு திருமணம் முடித்தார். பிறகு பாகிஸ்தான் சென்றவருக்கு அந்த நாட்டு குடியுரிமையும் கிடைத்தது. இதனால் அந்த பெண்ணின் இந்திய குடியுரிமை ரத்தானது.
இதற்கிடையில், திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்தானது. இதையடுத்து அந்த பெண் உ.பி.யில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். வாழ்க்கையை இழந்த விரக்தியில் இந்திய குடியுரிமை பற்றி கவலைப்படவில்லை. இங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இப்போது 13 வயதாகி விட்ட தன் மகளுடன் சேர்த்து அந்த பெண்ணுக்கும் இந்தியர் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டதால் அந்தப் பெண்ணுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கறிஞர் உதவியுடன் இந்திய குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்த அவரது மகள் குறித்த விவரங்களையும் இங்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்திலும் பதிவு செய்யாமல் இருந்து விட்டார். இதனால், அப்பெண்ணுடன் சேர்ந்து அவரது மகளும் சிக்கலுக்கு உள்ளாகி விட்டார்.
தற்போது பரேலியில் அந்த பெண், வீடுகளில் வேலை செய்து மகளை வளர்த்து வருகிறார். இப்பகுதியில் அவர் பாகிஸ்தானி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார். இவருக்காக வழக்கறிஞர் ஒருவர் இரக்கப்பட்டு வழக்கை நடத்தி வருகிறார். பணம் கேட்காத அந்த வழக்கறிஞர், பெண்ணின் விவரம் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT