Published : 04 May 2025 06:30 AM
Last Updated : 04 May 2025 06:30 AM

பஹல்காம் தாக்குதல் அன்று மட்டும் கடையை மூடியவர் உட்பட உள்ளூர் வியாபாரிகளிடம் தீவிர விசாரணை

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக உள்ளூர் வியாபாரிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது:

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த சுமார் 20 பேர் உதவி செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். இதில் 4 பேர், தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்திருக்கக்கூடும் என்று கருதுகிறோம்.

பஹல்காம் சுற்றுலா தலத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்த கடைகளின் உரிமையாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு கடைக்காரர் 15 நாட்களுக்கு முன்பு கடையை திறந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட ஏப்ரல் 22-ம் தேதி அவர் கடையை திறக்கவில்லை. அவரிடம் அதிதீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குதிரை சவாரி அழைத்துச் செல்வோர், சுற்றுலா பயணிகளுக்காக சாகச விளையாட்டுகளை ஏற்பாடு செய்யும் நபர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குஜராத் சுற்றுலா பயணி, ஜிப்லைனில் சென்றபோது வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் தீவிரவாதிகளின் தாக்குதல் பதிவாகி உள்ளது. அப்போது ஜிப்லைன் ஊழியர், 'அல்லாஹூ அக்பர்' என்று கூறியுள்ளார். அதுவும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. அந்த ஜிப்லைன் ஊழியரிடம் விசாரணை நடத்தினோம். அச்சத்தின் காரணமாக அவர் அவ்வாறு கூறியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கடந்த 11 நாட்களாக காஷ்மீர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 75 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தெற்கு காஷ்மீர் வனப்பகுதியில் தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனவே செனாப், பிர் பாஞ்சல், பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பகுதிகளின் வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீரின் ஹபாத்நாட், குல்காம், டிரால், கோகர்நாக் ஆகிய பகுதிகலை சேர்ந்த உள்ளூர் மக்கள், தீவிரவாதிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கி உதவி செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அந்த பகுதிகளில் சந்தேகத்துக்கு உரிய நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் காஷ்மீரின் ரஜோரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நிசார் அகமது, முஸ்தாக் ஹூசைன் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இரு தீவிரவாதிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிரவாதிகளுக்கு ஹவாலா பணம்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு சவுதி அரேபியாவை முக்கிய தளமாக பயன்படுத்தி வருகிறது. காஷ்மீரை சேர்ந்த ஏராளமானோர் சவுதியில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வாயிலாக காஷ்மீரில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

அதாவது ஐஎஸ்ஐ அமைப்பு ரூ.1 லட்சத்தை வழங்கினால், காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கு ரூ.65,000 பணம் விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள ரூ.35,000 கமிஷனாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த பணத்துக்கு ஆசைப்பட்டு காஷ்மீரை சேர்ந்த சிலர், ஐஎஸ்ஐ மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலாகவும் தீவிரவாதிகளுக்கு பணம் கடத்தப்படுகிறது. இந்த பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ட்ரோன்கள் வாயிலாக காஷ்மீருக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன. இதை தடுக்கவும் எல்லையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x