Published : 04 May 2025 06:28 AM
Last Updated : 04 May 2025 06:28 AM

இந்தோனேசியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை: வெளியுறவு அமைச்சகம் தலையிட உத்தரவு

இந்தோனேசியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கப்பல் கட்டும் தளம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜு முத்துக்குமரன், செல்வதுரை தினகரன், கோவிந்தசாமி விமல்கந்தன் ஆகிய 3 இந்தியர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இந்தோனேசிய நீதிமன்றம் மூவருக்கும் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மரண தண்டனை விதித்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட உத்தரவிடக் கோரி 3 பேரின் மனைவிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தங்கள் குடும்பத்தில் இம்மூவர் மட்டுமே வருமானம் ஈட்டும் நபர்கள் என்பதால் மேல்முறையீடு செய்ய தங்களுக்கு பண வசதி இல்லை என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் விசாரணைைக்கு வந்தது. அப்போது, 5 இந்தியர்களுக்கும் முறையான சட்ட உதவியை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்தோனேசியாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இருதரப்பு ஒப்பந்தம் அல்லது சர்வதேச மரபுகளின் கீழ் இந்தியர்களின் உரிமைகளை பாதுகாத்திட இந்தோனேசிய அரசை ராஜதந்திர முறையில் அணுகுமாறு வெளியுறவு அமைச்சகத்தை கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான நோட்டீஸை வெளியுறவு அமைச்சகம் சார்பில் அதன் வழக்கறிஞர் ஆசிஷ் தீக் ஷித் பெற்றுக் கொண்டார். இந்த விவகாரத்தில் கால அவகாசம் வழக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார். வழக்கை மே 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x