Published : 04 May 2025 06:22 AM
Last Updated : 04 May 2025 06:22 AM
கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெறுவது கடினம் என்ற சூழலில் கடந்த ஆண்டு தேர்வில் 67 பேர் 720 மதிப்பெண்களை பெற்றது சந்தேகங்களை எழுப்பியது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்டன. "குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன" என்று தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, "பிஹார் தலைநகர் பாட்னா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் ஆகிய பகுதிகளில் மட்டுமே முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதர பகுதிகளில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது" என்று தீர்ப்பளித்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
குறிப்பாக 14 மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 215 மாணவ, மாணவியரின் முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. விசாரணையின் முடிவில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கெனவே எம்பிபிஎஸ் படித்து வரும் 26 மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய சிலருக்கு சட்டவிரோதமாக உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் 26 பேரும் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 255 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வின்போது முறைகேடுகள் செய்து சிக்கிய 42 மாணவ, மாணவியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT