Published : 03 May 2025 09:06 AM
Last Updated : 03 May 2025 09:06 AM
பனாஜி: கோவா மாநில கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் சனிக்கிழமை (மே 3) அதிகாலை நடந்துள்ளது.
கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகோ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவில் மக்கள் அதிகம் திரண்ட நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மபுஸாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஆறுதல் கூறினார். அதோடு கள சூழலையும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவலை இன்னும் அதிகாரிகள் தெரிவிக்காமல் உள்ளனர். எனினும், இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் அதிக அளவில் மக்கள் திரண்டதால்தான் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. இதை மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரில் 8 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கோவா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே கூறியுள்ளார். 10 பேருக்கு லேசான காயம் என அவர் தெரிவித்துள்ளார். சம்பவத்தை அடுத்து மருத்துவ பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு, காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தீ மிதிக்கும் சடங்கில் பக்தர்கள் ஈடுபடுவார்கள். பார்வதி தேவியின் ஒரு வடிவமான லைராய் தேவியை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாவுக்காக கோவா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வருவது வழக்கம். மகாராஷ்டிரா, கர்நாடகா வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவிழாவை காண வருவார்கள். அதன் காரணமாக கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் தான் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT