பஜ்ரங் தள நிர்வாகி கொலை: மங்களூருவில் 144 தடை உத்தரவு

பஜ்ரங் தள நிர்வாகி கொலை: மங்களூருவில் 144 தடை உத்தரவு
Updated on
2 min read

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் பஜ்ரங் தள நிர்வாகி சுஹாஸ் ஷெட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மங்களூருவில் 6-ம் தேதி வ‌ரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த சுஹாஸ் ஷெட்டி (38) பஜ்ரங் தளம் அமைப்பில் தென்பகுதி செயலாளராக இருந்தார். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு சுள்ளியாவை சேர்ந்த பாஜக இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டாரு (27) வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக அடுத்த சில தினங்களில் முகமது பைசல் (23) கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுஹாஸ் ஷெட்டிக்கு நேரடி தொடர்பு இருந்ததால் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

தற்போது அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த சுஹாஸ் ஷெட்டி நேற்று மாலை மங்களூரு புறநகர் சாலையில் காரில் தன் ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார் சுஹாஸ் ஷெட்டி பயணித்த காரின் மீது வேகமாக மோதியது. இதனால் கீழே இறங்கி வந்த சுஹாஸ் ஷெட்டியை 6 பேர் கொண்ட கும்பல் வாள், கத்தி ஆகியவற்றுடன் துரத்தி சென்றது. அங்கிருந்து தப்பியோடிய சுஹாஸ் ஷெட்டியை விரட்டி சென்று நடுரோட்டிலே சரமாரியாக வெட்டியது. இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதையடுத்து பஜ்ரங் தள நிர்வாகிகள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இந்த தகவல் பரவியதை தொடர்ந்து மங்களூருவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மங்களூரு நகர போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் முகமது பைசல் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தை கண்டித்து பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்பினர் நேற்று மங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக எம்பி நளின் குமார் கட்டீல், எம்எல்ஏ பரத் ஷெட்டி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, சுஹாஸ் ஷெட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாஜக எம்பி நளின்குமார் கட்டீல் கூறுகையில், ''இந்துக்களுக்காக உழைத்த ஒருவ‌ரை கொன்றுவிட்டனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இந்துத்துவ தலைவர்க‌ளுக்கு பாதுகாப்பு இல்லை. சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும்''என கோரிக்கை விடுத்தார்.

மங்களூருவில் இந்துத்துவ அமைப்பினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று பதற்றமாக காணப்பட்டது. இதனால் மங்களூரு மாநகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால், வரும் மே 6ம் தேதி வரை மங்களூரு முழுவ‌தும் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்து, 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in