Published : 03 May 2025 05:48 AM
Last Updated : 03 May 2025 05:48 AM

ஆந்திர மாநில தலைநகர் அமராவதி மறுகட்டுமான பணி தொடக்க விழா: ரூ.58,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

ஆந்திர தலைநகர் அமராவதி மறுகட்டுமானப் பணியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: பிடிஐ |

அமராவதி: ஆந்திர தலைநகர் அமராவதி மறுகட்டுமான பணி உட்பட சுமார் ரூ.58,000 மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

ஆந்திர தலைநகர் அமராவதி மறுகட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அமராவதி வெலகபூடி பகுதியில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தலைநகருக்காக ரூ.49 ஆயிரம் கோடியில் 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், அரசு அதிகாரிகளின் குடியிருப்பு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே, ராணுவத்துக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். இதுதவிர 20 வளர்ச்சிப் பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.57,962 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இதில் மத்திய அரசின் ரூ.5,028 கோடி மதிப்பிலான 9 திட்டங்களும் அடங்கும். மத்திய பாதுகாப்பு மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) சார்பில் ஏவுகணை பரிசோதனை தளம், விசாகப்பட்டினத்தில் ரூ.100 கோடியில் வணிக வளாகம், குந்தக்கல்-மல்லப்பா ரயில்வே கேட்டில் ரூ.293 கோடியில் மேம்பாலம் மற்றும் ரூ.3,176 கோடி செலவிலான 6 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும் இதில் அடங்கும்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: புதிய ஆந்திரா மற்றும் புதிய அமராவதிக்காக சுமார் ரூ.60 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டினோம். இது திருப்பதி ஏழுமலையான், வீரபத்திரர் மற்றும் அமராவதி லிங்கேஷ்வர் ஆசிர்வாதத்தால் இது சாத்தியமாகி உள்ளது.

ஐடி, ஏஐ, கிரீன் எனர்ஜி, தொழில்வளம், பயிற்சி வகுப்புகள், கல்வி, மருத்துவம் என அனைத்து துறையிலும் முன்னணி நகரமாக அமராவதி திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

நான் குஜராத் முதல்வராக பணியாற்றியபோது, சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தை எப்படி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார் என்பதை தெரிந்துகொண்டு நானும் செயல்படுத்தினேன்.

ஆந்திரா தற்போது மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. தலைமைச் செயலகம், சட்டப்பேரவை, ராஜ்பவன் என அனைத்தும் இங்கு பிரம்மாண்டமாக வரப்போகிறது. பொற்கால ஆந்திரா என்டிஆரின் கனவாக இருந்தது. அவரது கனவை நாம் நனவாக்குவோம். தற்போது நம் நாடு முன்னேறும் நாடுகள் பட்டியலில் இருக்கிறது. இதற்கு ஆந்திராவும் அதிகமாக கை கொடுக்கிறது.

ஆந்திராவில் சாலை இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ரயில்வே துறை சார்பிலும் பல பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனால் ஆந்திராவும் அசுர வேகத்தில் முன்னேறுகிறது. ஆந்திராவில் ரயில்பாதை 100% மின்மயமாக்கப்பட்டுள்ளது. 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 70-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆந்திராவில் தொழில்வளம் அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகுகிறது.

போலவரம் அணை கட்டும் பணி விரைவில் நிறைவடையும். நதிகள் இணைப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செல்லும் ஒவ்வொரு விண்கலமும் நம் நாட்டுக்கு பெருமை தேடித்தருகிறது. ஆந்திராவில் மற்றொரு திட்டமாக ஏவுகணை பரிசோதனை மையம் அமைக்கப்படுகிறது. இதுவும் நாட்டுக்கு பெருமை தேடித்தரும்.

விசாகப்பட்டினத்தில் ரூ.100 கோடி செலவில் வணிக வளாகம் வரப்போகிறது. இதில் கைவினைப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆந்திராவில் நடைபெறும் யோகா தின விழாவில் நான் பங்கேற்பேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சந்திரபாபு பெருமிதம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், "அமராவதி நகரை 3 ஆண்டுகளுக்குள் நாங்கள் உருவாக்குவோம். உள்வட்ட, வெளிவட்ட சாலைகள், ரயில்பாதை இணைப்பு, விமான நிலையம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என கட்டமைப்புகளை உருவாக்குவோம். பசுமையான தலைநகரம் இது உருவாகும்” என்றார்.

முன்னதாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திர மாநிலம், கன்னாவரம் விமானம் நிலையம் வந்தடைந்தார். பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அமராவதி வந்தார்.

அவரை ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் ராம்மோகன் நாயுடு, பண்டி சஞ்சய், மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x