பஹல்காம் தாக்குதல்: உச்ச நீதிமன்ற உத்தரவால் நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பித்த பாக். குடும்பம்!

பஹல்காம் தாக்குதல்: உச்ச நீதிமன்ற உத்தரவால் நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பித்த பாக். குடும்பம்!

Published on

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட இருந்த 6 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஆவணங்களை சரிபார்க்குமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அகமது தாரெக் பட் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் காஷ்மீரில் வசித்து வருவதாகவும், தங்கள் மகன் பெங்களூருவில் பணிபுரிவதாகவும் ஆனால், விசா காலம் முடிந்துவிட்டதாகக் கூறி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு நாடு கடத்த அதிகாரிகள் தங்களை தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்தப் பிரச்சினை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் உள்ளது. விசா காலாவதியானதாகக் கூறப்படும் ஆறு பேரின் அடையாள ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது போன்ற கட்டாய நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம். ஆவணச் சரிபார்ப்பு உத்தரவால் பாதிக்கப்பட்டால், அவர்கள் ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்” எனத் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானியர்கள் வெளியேற அவகாசம் நீட்டிப்பு: முன்னதாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை மறு தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு நேற்று நீட்டித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை உடனடியாக நிறுத்த கடந்த ஏப்ரல் 24-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

உரிய அனுமதி பெற்று இந்தியா வந்தவர்கள், இவ்வழியே மே 1-ம் தேதிக்கு முன் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்பட்டு பகுதி அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பாகிஸ்தான் குடிமக்கள் அட்டாரி சோதனை சாவடி வழியாக இந்தியாவை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய வான்பரப்பில் பாக். விமானங்கள் பறக்க தடை: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை. எனினும் பாகிஸ்தானின் விமான சேவை நிறுவனங்கள், இந்திய வான் பரப்பு வழியாக சிங்கப்பூர், மலேசியா, கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வந்தன. தற்போது இந்திய வான் பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மே 23-ம் தேதி வரை தடை நீடிக்கும். அதன்பிறகு அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in