''இது உளவுத்துறையின் தோல்வி'' - பஹல்காம் தாக்குதல் குறித்து பரூக் அப்துல்லா கருத்து

பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லா
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்துள்ள தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இது பாதுகாப்பு தோல்வி என்றும் ஜம்மு காஷ்மீரை சீர்குலைப்பதற்கான பாகிஸ்தானின் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா கூறுகையில், "இது பாதுகாப்புத் தோல்வி மற்றும் உளவுத்துறை குறைபாடு விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை. நாங்கள் எங்களின் வாழ்க்கை சிறப்பாக செல்வதை அவர்கள் (பாகிஸ்தான்) விரும்பியிருக்க மாட்டார்கள். எங்கள் மக்களுக்கிடையில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. அதனால் அவர்கள் இந்தத் தாக்குதலை (பஹல்காம்) நடத்தியுள்ளனர். ஆனால் அது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை எவ்வாறு பாதிக்கும் என்ற உண்மையை அவர்கள் யோசித்துப் பார்க்கவில்லை.

கடந்த பத்தாண்டுகளாக அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்ற, மசூதிகளை எரிக்க கதைகள் நடந்து வருகின்றன. நாங்கள் ஏற்கனவே அவைகளை எதிர்கொண்டு வருகிறோம். தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் தலைவர் ஜெனரல் ஆசிம் முனிர் இரண்டு நாடு கொள்கையைப் பேசித் தூண்டிவிட்டுள்ளார். ஒருவேளை போர் வந்தால், அது பேச்சுவார்த்தைக்கு வரும் ஆனால் அதில் என்ன நடக்கும் என்று அல்லாவுக்கு மட்டுமே தெரியும்.

நாளை என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. இன்று இரண்டு நாடுகளும் சண்டைக்குத் தயாராகி வருகின்றன. அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களையும் பிடிக்க ஒரு தீர்வு காணவேண்டும்.

ஆனால் மக்களை வெளியேற்றுவது சரியான செயல் இல்லை. அது மனிதாபிமானத்துக்கு எதிரானது. சிலர் இங்கே 75 வருடங்களாக இருக்கிறார்கள் அவர்களின் குழந்தைகள் 25 வருடங்களாக இங்கே இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக இருந்ததில்லை. மாறாக அவர்கள் தங்களை இந்தியாவுக்காக அர்ப்பணித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவினைத் தெரிவித்திருந்த பரூக் அப்துல்லா, பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in