இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமானங்கள் அந்த நாட்டின் வான்வெளியில் பறக்க அண்மையில் தடை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வரும் மே 24-ம் தேதி இந்திய நேரப்படி காலை 5.29 வரையில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘பாகிஸ்தான் நாட்டு விமானங்கள், அந்த நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இயக்கும் விமானங்கள், ராணுவ விமானங்கள் என எந்தவிதமான வானூர்தியும் இந்திய வான் எல்லையை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதியை நெருங்கும் சமயத்தில் அது திருத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கடியை தரும் எனவும், பயண நேரத்தை அதிகரிக்க செய்யும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு செல்லும் விமானங்கள் இந்திய வான்வெளியை தவிர்க்க வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு மேற்கொண்டது. இதையடுத்து இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in