Published : 01 May 2025 01:24 AM
Last Updated : 01 May 2025 01:24 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடனிருந்தார். பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வரும் வேளையில் இத்தலைவர்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியாக ஆர்எஸ்எஸ் கருதப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் பரந்த வலையமைப்பை இவ்வமைப்பு கொண்டுள்ளது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பாதுகாப்பு தொடர்பான உயர்நிலை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் இதில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலை நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல் என்று ஆர்எஸ்எஸ் கண்டித்துள்ளது. மேலும் இதற்கு பின்னால் இருப்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT